Thursday, August 18, 2011

புகை பிடிக்கும் பெண்களுக்கு இதய நோய் பாதிப்பு அதிகம்


புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களில் ஆண்களைவிட பெண்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் யுனிவர்சிட்டி ஆப் மின்னசோட்டா ஆராய்ச்சியாளர்கள், 1966 முதல் 2006 வரையில் இதய நோயால் பாதிக்கப்பட்ட 24 லட்சம் பேரின் தகவல்களை திரட்டினர்.

அவர்களது புகைப் பழக்கம் பற்றி ஆராயப்பட்டது. புகைப் பழக்கத்தால் ஆண்களைவிட பெண்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு 25 சதவீதம் அதிகம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனினும், இதற்கான காரணங்கள் தெரியவில்லை. புகைப்பவர்களில் ஆண்களைவிட பெண்களுக்கு இதய நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதற்கான காரணங்களை ஆராய்வதற்காக, 40 லட்சம் பேரின் விவரங்களை சேகரிக்கும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆய்வின் அடிப்படையில், சிகரெட் பிடிக்கும் பெண்களுக்கு இதய நோய் பாதிப்பு அதிகம் என்பதை பெண்களுக்கு உணர்த்தும் வகையில் சிகரெட் உற்பத்தியாளர்களுக்கான விதிமுறைகளில் திருத்தம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அதாவது, சிகரெட் பாக்கெட்டிலேயே இதுபற்றி விளம்பரம் செய்ய வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை.

உலகம் முழுவதும் 110 கோடி பேர் புகைப் பிடிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. புகையால் ஆண்டுக்கு 50 லட்சம் பேர் பலியாவதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதேநிலை தொடர்ந்தால் இந்த எண்ணிக்கை 80 லட்சமாக அதிகரிக்கும் என்றும், இதில் 25 லட்சம் பெண்களாக இருப்பார்கள் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

vedio

film