
Wednesday, June 22, 2011
சரும அழகிற்கு உதவும் உணவுகள்
மிளிரும், மென்மையான, புத்துணர்ச்சியான மற்றும் மிருதுவான என, பல்வேறு வகையான சருமங்கள் இருக்கின்றன. இத்தகைய சருமங்களை பெறுவதற்காக, ஏராளமான அழகு சாதனப் பொருட்களும் விளம்பரப்படுத்தப்படுகின்றன. ஆனால், நாம் சாப்பிடும் உணவின் மூலமே, சருமத்தை அழகாகவும், ஒளிரும் தன்மை உடையதாகவும் வைத்துக் கொள்ள முடியும்.
பொதுவாகவே, சரும ஆரோக்கியத்துக்கு வைட்டமின் ஏ, பி, சி, இ, ஆன்டி ஆக்சிடன்ட்கள், சிங்க் மற்றும் செலேனியம் ஆகியவை மிகவும் அவசியம். அதிகளவு தண்ணீர் குடிப்பது மற்றும் தோலுக்கு ஈரப்பதத்தை வழங்கும் அத்தியாவசிய கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதும் முக்கியமானது. பருப்பு வகைகள், எண்ணெய் சத்துக்கள் நிறைந்த மீன்கள் போன்றவற்றில் இந்த அத்தியாவசிய கொழுப்புக்களான, ஒமேகா-3 கொழுப்பு சத்துக்கள் காணப்படுகின்றன. மிளிரும் சருமம் பெற விரும்புபவர்கள், காபின் போன்ற பொருட்களை தவிர்ப்பது நல்லது. இதோ ஒருவரின் சரும வகைகளுக்கு ஏற்பட சில ஆரோக்கிய டிப்ஸ்கள்…
சென்சிடிவ் சருமத்தினர்:
* உணவு முறைகளை திட்டமிட்டுக் கொள்வதோடு, ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும்.
* பதப்படுத்தப்பட்ட, அதிக சர்க்கரை நிறைந்த மற்றும் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
* சென்சிடிவ் சருமத்தினருக்கு தோலில் எரிச்சல் மற்றும் வைட்டமின் பி பற்றாக்குறையால், வறட்சி, செதில்கள் உதிர்தல் ஆகியவை ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே, அவர்கள் வைட்டமின் பி சத்து அதிகம் நிறைந்த பருப்பு வகைகள், தானியங்கள் ஆகியவற்றை சாப்பிட வேண்டும்.
எண்ணெய் பசை சருமத்தினர்:
* எண்ணெய் பசை சருமத்திற்கு ஹார்மோன்களே காரணம். எனவே, இத்தகைய சருமத்தினர், ஹார்மோன் சமநிலையை ஏற்படுத்துவது முக்கியம்.
* பழங்கள், காய்கறிகள் மற்றும் போதுமான அளவு நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
* எண்ணெய் பசை சருமத்திற்கும் வைட்டமின் பி2 மற்றும் பி5 பற்றாக்குறைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. எனவே, இந்த வைட்டமின்கள் அதிகளவு நிறைந்த பீன்ஸ் மற்றும் பருப்புகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
* முட்டைகோஸ் மற்றும் காலிபிளவர் ஆகிய காய்கறிகள், அதிகளவு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பதை கட்டுப்படுத்துகிறது. இவை ஹார்மோன் சமநிலை ஏற்பட உதவுகிறது.
* மாசுமறுவற்ற சருமம் பெற, அதிகளவு “சிங்க்’ நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். காளானில் அதிகளவு “சிங்க்’ சத்துக்கள் நிறைந் துள்ளன.
* பிளாஸ்டிக் கன்டெய்னர்களில் உணவுப் பொருட்களை வைத்து மைக்ரோவேவ் ஓவனில் சூடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும். இவற்றால், செனஸ்ட்ரோஜென் எனும் ரசாயனம் உருவாகி, அவை ஹார்மோன் மாற்றங்கள் நிகழ வழி வகுத்துவிடும்.
* உணவுப் பட்டியலில் இருந்து, உடலுக்கு தீங்கு விளைவிக்கும், கெட்ட கொழுப்பு நிறைந்த உணவை நீக்கிவிடுங்கள்.
வறண்ட சருமத்தினர்:
* சருமம் நெகிழ்வு தன்மையுடனும், ஈரப்பதத்துடனும், இருக்க உதவுவது, வைட்டமின் இ சத்து. பாதாம் பருப்பு, முட்டை, பச்சை காய்கறிகள், பருப்புகள், கோதுமை ஆகியவற்றில் வைட்டமின் இ சத்து அதிகளவு நிறைந்துள்ளது.
* சருமம் எப்போதும் இளமையுடன் வைத்திருக்க உதவும் சல்பர் நிறைந்த உணவுகளான முட்டை, பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை அதிகளவு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment