Friday, July 1, 2011

வாழையின் மகத்துவம்

வாழைத் தண்டை பொரியல், கூட்டு, சாம்பாராகச் செய்து சாப்பிடுவது வரைக்கும் தான் நமக்குத் தெரியும். அது எந்த வகையில் நமக்கு மருந்தாக உதவுகிறது என்பதையும் தெரிந்து கொள்வோம்.வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல் கற்களை விடுவிக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வையும் நீக்கும். வாழைத் தண்டுச் சாற்றை இரண்டு அல்லது மூன்று அவுன்சு வீதம் தினமும் குடித்து வந்தால், வறட்டு இருமல் நீங்கும். கோழைக் கட்டையும் இளகச் செய்யும். பாம்பு கடிக்கு வாழைத் தண்டுச் சாற்றை ஒரு டம்ளர் வீதம் உள்ளுக்குக் கொடுத்தால் விஷம் தானாக இறங்கிவிடும்.வாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருப்பது அனைவரும் அறிந்த விஷயம். அந்தத் துவர்ப்பைத் தண்ணீர் விட்டுப் பல தடவை கசக்கிப் பிழிந்து எடுத்து விடுகிறார்கள் நம்மில் பலர். துவர்ப்பு இருந்தால், சுவையிருக்காது என்று நினைத்து விடுகின்றனர்.அந்தத் துவர்ப்பு இருந்தால் ஊட்டச் சத்து வீணாகாமல் உடம்புக்கு `பி’ வைட்டமின் கிடைக்கிறது. பல வியாதிகளும் இதனால் நிவர்த்தி அடைகிறது என்பதே நிதர்சன உண்மை.
வாழை அநேக மருத்துவப் பயன்களைக் கொண்டது. குறிப்பாக விஷப் பூச்சிகளின் தாக்குதலின்றி காக்கும் தன்மை வாழைக்கு உண்டு. இதனால்தான் சுபகாரியங்களில் வாழையை முதன்மையாக நட்டு வைக்கின்றனர்.வாழை ஒரு கிருமி நாசினியாகும். வாழையின் ஒரு சிறிய கன்றை நட்டு வைத்தால் அதிக பட்ச கன்றுகளுடன் ஒரு குடும்பமாக காட்சி தரும். வாழையை அம்பணம், அரம்பை, ஓசை, கதலி, கவர், சேகலி, திரணபதி என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.
 அடுக்கு வாழை, ரஸ்தாளி வாழை, பூவன் வாழை, கருவாழை, கொட்டை வாழை, செவ்வாழை, நவரை வாழை, நாட்டு வாழை, பசும் வாழை, பேயன் வாழை, மலை வாழை, மொந்தன் வாழை வேள் வாழை, பச்சை வாழை, மோரீஸ் வாழை, கற்பூர வாழை, நேந்திரம் வாழை, சந்தன வாழை, மட்டி வாழை, ரசக்கதலி, கதலிவாழை, மதுரவாழை, சிங்கன் வாழை, கல்வாழை என பல வகைகள் உள்ளன.
 வாழையின் மருத்துவப் பயன்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அவற்றில் சில மருத்துவப் பயன்களை அறிவோம்.

வாழை இலை
வாழை இலையில் உணவு பரிமாறுவது தென்னிந்திய விருந்தோம்பல் கலாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது.
வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.
தீக்காயம் பட்டவர்களை வாழை இலையின் மீது படுக்க வைத்தால் அதில் உள்ள பச்சைத் தன்மை தீக்காயத்தின் எரிச்சலைப் போக்கும்.

வாழைப் பூ
100 கிராம் வாழைப்பூவில்
கால்சியம் - 32 மி.கி.
பாஸ்பரஸ் - 42 மி.கி.
 புரதம் - 1.3 மி.கி.
நார்ச்சத்து - 1.3 மி.கி.
மற்றும் இரும்புச் சத்து, வைட்டமின் பி மற்றும் சி சத்துக்கள் நிறைந்துள்ளன. வாழைப்பூ துவர்ப்புத் தன்மை உள்ளதால் இரத்தத்தை சுத்தப் படுத்துவதுடன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது,.
வாழைப்பூவை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொண்டால் இரத்த அழுத்தம் குறையும். இரத்ததில் உள்ள கொழுப்பை குறைக்கும். இரத்தம் சுத்தமாகும். இரத்த ஓட்டம் சீராகும். இரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
வாழைப் பூ சாறு எடுத்து அதில் பனங்கற்கண்டு கலந்து அருந்தினால் வெட்டை நோய், குருதி வெள்ளை, வயிற்றுக் கடுப்பு நீங்கும். மலச் சிக்கலைப் போக்கும். மூல நோயால் அவதிப்படுபவர்களுக்கு வாழைப்பூ சிறந்த மருந்தாகும். தாதுவை விருத்தி செய்யும்.
சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்கள்,
வாழைப்பூ - கால் பாங்கு
சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
பூண்டுப்பல் - 4
இஞ்சி - 1 துண்டு
நல்ல மிளகு - 5 எடுத்து சூப் செய்து காலை உணவுக்குப்பின் அருந்தி வந்தால், சர்க்கரை நோயின் பாதிப்பு குறையும்.

வாழைப் பிஞ்சு
வாழைப் பிஞ்சு மருத்துவக் குணம் கொண்டது. இரத்தக் கொதிப்பை குணப்படுத்தும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். அடிக்கடி சிறுநீர் வெளியேறுவதைக் குறைக்கும். மூலத்தில் இரத்தம் வெளியேறுவதைத் தடுக்கும். உடலுக்கு ஊட்டத்தைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

வாழைக்காய்
100 கிராம் வாழைக் காயில்
இரும்புச் சத்து 6.3 மி.கிராம்
ஃபோலிக் அமிலம் 16.0 மி.கி
மற்றும் வைட்டமின் ஏ,பி,சி சத்துக்கள் நிறைந்துள்ளது.
போலிக் அமிலப் பற்றாக்குறையால் கருவுற்ற தாய்க்கும், குழந்தைக்கும் உண்டாகும் ரத்தச் சோகையைப் போக்க வாழைக்காய் சிறந்த மருந்தாகும்.
அதிக ஊட்டச்சத்து கொண்ட இது வாயுவை அதிகரிக்கும் குணமுள்ளதால் உணவில் அளவோடு சேர்த்துக்கொள்ளுதல் நல்லது. வாழைக்காயை சமைக்கும்போது அதிகளவு பூண்டு, இஞ்சி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வாழைப்பழம்
முக்கனிகளில் இதுவும் ஒன்று. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பழமாகும். வாழைப் பழத்தில் அதிக அளவு ஊட்டச்சத்துக்களும், உயிர்ச் சத்துக்களும் நிறைந்துள்ளன.
100 கிராம் வழைப்பழத்தில்
நீர்ச்சத்து - 66.4 கிராம்
நார்ச்சத்து - 0.5 கிராம்
கொழுப்பு - 0.3 கிராம்
புரதம் - 1.2 கிராம்
மாவுப்பொருள் – 28.0 கிராம்
சக்தி - 114.0 கலோரி
பாஸ்பரஸ் - 36.0 மி.கி.
இரும்புச்சத்து - 0.8 மி.கி.
சுண்ணாம்புச் சத்து – 16.0 மி.கி.
தையாமின் - 0.05 மி.கி.
கரோட்டின் - 0.78 மி.கி.
ரைபோஃபிளேவின் - 0.07 மி.கி
நியாசின் - 0.5 மி.கி.
வைட்டமின் ஏ - 12.01
வைட்டமின் பி - 0.5 மி.கி.
வைட்டமின் பி2 - 0.08 மி.கி.
வைட்டமின் சி - 0.02 மி.கி.

சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை!

 "சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், புற்றுநோய், நரம்புமண்டல நோய்கள், ஞாபக மறதி நோய் போன்ற பல நோய்களைத் தடுக்கும் சக்தி வேர்க்கடலைக்கு உள்ளது"
வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கிறதே, அது எப்படி பிளட் பிரஷரைத் தடுக்கும்?
வேர்க்கடலை, கடலை எண்ணெய் என்றதுமே முதலில் எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்துதான். வேர்க்கடலை, கடலை எண்ணெயைப் பயன்படுத்தினால் இரத்த அழுத்த நோய் வரும், இதய நோய்கள் வரும் என்ற பயம் பரவலாக உள்ளது. ஆனால் இந்தப் பயத்திற்கு எந்தவித ஆதாரமுமில்லை.
வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு. உடம்புக்குத் தேவையான கொழுப்பு. வேர்க்கடலையை ஏழைகளின் புரதம் என்று கூடச் சொல்லலாம். அந்த அளவுக்குப் புரதச் சத்து அதிகமாக உள்ளது. அது மட்டுமல்ல, 30 விதமான ஊட்டச் சத்துகள் வேர்க்கடலையில் உள்ளன. சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு வேர்க்கடலை நல்ல உணவு.
சர்க்கரை வியாதிகாரர்களுக்கு வேர்க்கடலை எப்படி நல்ல உணவாகிறது?
நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் இருந்து எந்த அளவுக்கு சர்க்கரை ரத்தத்தில் சேர்கிறது என்பதைக் கண்டறிந்து அளந்து வைத்திருக்கிறார்கள். அதை கிளைசெமிக் இண்டெக்ஸ் என்பார்கள்.
வேர்க்கடலையில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவு. அதாவது, வேர்க்கடலை சாப்பிட்டால் அதில் இருந்து உடம்பில் சேரும் சர்க்கரையின் அளவு மிக மிகக் குறைவு. எனவே சர்க்கரை வியாதிக்காரர்கள் வேர்க்கடலையை எந்தவிதப் பயமுமின்றித் தாராளமாகச் சாப்பிடலாம். மேலும் வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன்களைத் துரிதப்படுத்தும் தன்மையும் உள்ளது. இதுவும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது.
வேறென்ன மருத்துவ குணங்கள் வேர்க்கடலையில் உள்ளன?
ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் தன்மை சோடியத்துக்கு உள்ளது. வேர்க்கடலையில் சோடியத்தின் அளவு குறைவு. எனவே வேர்க்கடலை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்காது. குறையும்.
வேர்க்கடலையில் நார்ச்சத்து அதிகம். வேர்க்கடலை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது. உடல் பருமன் குறையும்.
இன்னொரு விஷயம், வேர்க்கடலை சாப்பிட்டவுடன், "சாப்பிட்டது போதும்" என்ற திருப்தி மிக விரைவில் வந்துவிடும். எனவே வேர்க்கடலையைச் சாப்பிட்டு முடித்தவுடன் அடுத்து எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றாது. இதனால் சாப்பிடும் இடைவெளி அதிகரிக்கும். அடிக்கடி எதையாவது சாப்பிட்டு, எதையாவது கொறித்து உடல் எடையை அதிகரித்துக் கொள்ளமாட்டீர்கள்.
வேர்க்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக் கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகமாக உள்ளன. இந்த வைட்டமின்கள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமானது. இந்தச் சத்துப் பொருட்கள் குறைந்தால் பிறக்கும் குழந்தை நரம்புக் கோளாறுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது. எனவே கர்ப்பிணிகள் வேர்க்கடலையை அதிகம் சாப்பிட வேண்டும்.
வேர்க்கடலையில் சில உயிர் வேதிப் பொருட்கள் உள்ளன. அவை மனித உடலில் புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்களை அழித்துவிடுகின்றன. குறிப்பாக மார்பகப் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய், நிணநீர்ப்பை புற்றுநோய் போன்றவை உருவாகக் காரணமாகும் செல்களை வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருட்கள் அழித்துவிடுகின்றன.
வேர்க்கடலையில் நைட்ரிக் அமிலம் உள்ளது. வேர்க்கடலையைச் சாப்பிடுவதன்மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. இதனால் ரத்தம் சீராக ஓடும். ரத்த அழுத்தம் குறையும்.
நாம் சாப்பிடும் உணவு உடலில் சேர்ந்து சக்தியாக வெளிப்படுதல், உடலின் வளர்ச்சியாக உருமாறுதல், கழிவுகள் அகற்றப்படுதல் போன்றவை நிகழ்கின்றன. இந்த நிகழ்ச்சிகளை வளர்சிதை மாற்றம் என்பார்கள். இப்படி வளர்சிதை மாற்றம் நடைபெறும்போது சில தேவையில்லாத பொருட்கள் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும். பின்பு அவை உடலுக்குத் தேவையில்லாத கொழுப்பாக மாறிவிடும்.
ஆனால் வேர்க்கடலை சாப்பிட்டால் அதிலுள்ள உயிர் வேதிப் பொருள்கள் இப்படித் தேவையில்லாமல் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களை கல்லீரலுக்குள் தள்ளிவிட்டுவிடும். தேவையில்லாத அந்தப் பொருட்கள் கழிவாகி வெளியேறிவிடும்.
வேர்க்கடலை சாப்பிட்டால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்கள் குறைந்துவிடும். பார்க்கின்ஸன், அல்ஸ“மர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க வேர்க்கடலை உதவும். வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருள்கள் நரம்பு செல்களை நன்றாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. அதனால் நரம்புகள் நன்றாகக் செயல்படுகின்றன.
இதிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் உடம்பில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கிவிடும். வேர்க்கடலையில் நல்ல கொழுப்பு இருக்கிறது.
வேர்க்கடலையில் இருந்து தயாரிக்கப்படும் கடலை எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம்தானே? அது உடலுக்குக் கெடுதி இல்லையா?
தண்ணீரைச் சுட வைத்தால் கொஞ்சம் கொஞ்சமாகச் சூடேறி 100 டிகிரி சென்டிகிரேடு வெப்ப நிலை வந்தவுடன் தண்ணீர் கொதிக்கத் தொடங்கிவிடும். இதை நீரின் கொதிநிலை என்பார்கள். அதைப் போல எண்ணெயின் கொதிநிலையை ஸ்மோக் பாயிண்ட் என்பார்கள்.
எண்ணெய் கொதிக்கத் தொடங்கினால் அதில் உடலுக்குத் தேவையற்ற கெட்ட கொழுப்புகள் உருவாகிவிடும்.
கடலெண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் பிற எண்ணெய்களை விட அதிகம். பிற எண்ணெய்களின் ஸ்மோக் பாயிண்ட் 275 இலிருந்து 310 வரை இருக்கிறது.
ஆனால் கடலை எண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் 320. இதனால் கடலை எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் போது அது எளிதில் கொதிநிலையை அடையாது. அதாவது கெட்ட கொழுப்புகள் உருவாகாது. அதே சமயம் கடலை எண்ணெய்யில் உள்ள நல்ல கொழுப்பு அப்படியே இருக்கும். இப்போது சொல்லுங்கள், கடலை எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்தினால் உடலுக்குக் கெடுதியா?
ஆனால் இதில் கவனிக்க வேண்டிய ஒன்று இருக்கிறது.
சுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெயில் உடலுக்குக் கெடுதி தரும் கொழுப்பு இருப்பதற்கு வாய்ப்புள்ளது. ஏனென்றால் எந்தவொரு எண்ணெய்யையும் சுத்திகரிப்பதற்காக பலமுறை அதிக வெப்பத்தில் கொதிக்க வைக்கிறார்கள். இதனால் உடலுக்குத் தீங்கு செய்யும் கெட்ட கொழுப்புகள் அதில் உருவாகக் கூடிய வாய்ப்பு உள்ளது.
வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடலாமா? ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்?
வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ஆனால் வேர்க்கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது. வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன.
ஒரு நாளைக்கு மாலை வேளைகளில் தின்கிற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம்.
வேர்க்கடலையைச் சாப்பிடும்போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க்கடலையைச் சாப்பிடக் கூடாது. கசப்பேறிய வேர்க்கடலையில் அஃப்லோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது. இது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக் கூடியது. எனவே புத்தம் புதிதான வேர்க்கடலையையே சாப்பிட வேண்டும்.

vedio

film